தொல்காப்பியம் முதற்கொண்டு பழந்தமிழ் நூற்கள் பலவற்றிலும் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டும் தரவுகள் ஏராளமாகக் கொட்டிக் கிடக்கின்றன. திருமுருகன் மட்டுமே தமிழ்க்கடவுள் என்று இப்போது பெரும்பான்மையோரின் மனத்தில் ஒரு கருத்தாக்கம் உருவாக்கப்பட்டிருக்கிறது; அப்படி நிலைநாட்ட எந்த விதமான தரவுகள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து எடுத்து வைக்கப்பட்டனவோ அதே அளவிற்கு அதே தரத்தில் அதே போன்ற தரவுகள் கண்ணனும் தமிழ்க்கடவுளே என்று காட்டுவதற்கு பழந்தமிழ் இலக்கியங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை எல்லாம் பார்ப்பது இந்தக் கட்டுரையின் நோக்கம் இல்லை. அந்தத் தரவுகளை ஒவ்வொன்றாக எழுதிக் கொண்டு வருகிறேன்; இனிமேலும் எழுதுவேன். இன்றைக்கு 'மாயனை மன்னு வடமதுரை மைந்தனை' என்ற திருப்பாவை வரிகளில் சொல்லப்படும் மதுரை வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுராவா தெற்கே வைகைக்கரையில் இருக்கும் மதுரையா என்று மட்டும் ஆராய்வோம்.
ஆன்மிகத்தையும் பக்தி இலக்கியங்களையும் முடிந்த வரையில் எளிமைப்படுத்தி அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் வகையில் எழுதி வரும் நல்நண்பர் இரவிசங்கர் இந்த வரியில் சொல்லப்படும் வடமதுரை மைந்தன் தமிழக மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை வாழ் அழகனே என்று சொல்கிறார். ஆண்டாள் தென் தமிழகத்தில் இருக்கும் வில்லிபுத்தூரில் இருந்து பார்க்கும் போது தமிழக மதுரை அவளுக்கு வடக்கே அமைகிறது; அதனால் அந்த மதுரையைத் தான் அவள் வடமதுரை என்றாள் என்கிறார். அதற்கு வடபழனி, தென்பழனி போன்ற எடுத்துக்காட்டுகளையும் காட்டுகிறார். ஏரணத்திற்குப் பொருந்துவதைப் போல் தோன்றினாலும் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அதன் மெய்ப்பொருள் காண்பதே சிறப்பு என்பதால் இன்னும் கொஞ்சம் ஆராயலாம் என்று தோன்றியது.
வில்லிபுத்தூருக்கு வடக்கே தான் தமிழக மதுரை இருக்கிறது. அங்கு கூடல் அழகர் திருக்கோவில் இருக்கிறது. அதனால் வடமதுரை என்று திருப்பாவையில் குறிக்கப்பட்டது தமிழக மதுரை தான் என்றால் வடமதுரை மைந்தன் (வடமதுரைத் தலைவன்) என்பவன் கூடல் அழகராகவே எடுத்துக் கொள்ளலாம். மதுரைக்கு வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலை அழகனாம் கள்ளழகரைத் தான் அந்தத் தொடர் குறிக்கிறது என்று சொல்ல வேண்டியதில்லை. அப்படி குறிப்பாக கள்ளழகரைத் தான் சொன்னாள் கோதை என்பதற்கு ஏதேனும் குறிப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
வடமதுரை என்பது தமிழக மதுரை தானா என்ற கேள்விக்குப் பதிலாக நாச்சியார் திருமொழியில் இருந்து சில வரிகளை எடுத்துத் தந்திருக்கிறார். அவற்றையும் ஆராய்வோம்.
பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்
யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்
சோலைமலைப்பெருமாள் துவராபதி எம்பெருமான்...
1. பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்; யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின்
இந்த வரிகள் வருவது 'மற்றிருந்தீர்' என்று தொடங்கும் நாச்சியார் திருமொழியின் 12ம் திருமொழி. இந்தத் திருமொழியில் எல்லா பாசுரங்களிலும் 'என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்' என்று சொல்லும் விதமாக 'உய்த்திடுமின்' என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார் நாச்சியார்.
மதுரைப் புறத்தென்னை உய்த்திடுமின், ஆய்ப்பாடிக்கே என்னை உய்த்திடுமின், நந்தகோபன் கடைத்தலைக்கே நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின், யமுனைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து போர்க்களமாக நிருத்தம் செய்த பொய்கைக்கரைக்கு என்னை உய்த்திடுமின், பத்தவிலோசனத்து என்னை உய்த்திடுமின், பாண்டிவடத்தென்னை உய்த்திடுமின், கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின், துவராபதிக்கென்னை உய்த்திடுமின் என்றெல்லாம் சொல்கிறாள். இவற்றில் 'பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்' என்பதை 'பாண்டிய நாட்டில் வடபகுதியில் இருக்கும் மதுரை நகருக்கு என்னை கொண்டு சேருங்கள்' என்று பொருள் கொள்கிறார் இரவிசங்கர். பொருத்தமான பொருள் தானா? மற்ற இடங்களில் எல்லாமே கண்ணனின் பிறப்பும் வாழ்வும் நடந்ததென சொல்லப்பட்ட இடங்களை நாச்சியார் பாடும் போது இங்கே திடீரென்று பாண்டிய நாட்டைச் சொல்வாரா? பொருந்துகிறதா?
இதற்கு முந்தைய வரியையும் சேர்த்துப் பார்த்தால் பொருள் இன்னும் தெளிவாகப் புரியும். 'பிலம்பன் தன்னை பண் அழியப் பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்னை உய்த்திடுமின்'. பாருங்கள் திருமாலிருஞ்சோலையில் பலதேவனின் கோவில் இருந்ததாக பரிபாடல் சொல்கிறது; இங்கும் நாச்சியார் பலதேவனைச் சொல்லியிருக்கிறார்; அதனால் இது பாண்டிய நாட்டின் வடப்புறத்தில் இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தான் குறிக்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறதே - என்றெல்லாம் சொல்லத் தோன்றுகிறதா? அவக்கரம் வேண்டாம்; இன்னும் பொருளை ஆய்வோம். பிலம்பன் தன்னை பண் அழிய பலதேவன் வென்ற பாண்டி வடத்து என்கிறாளே நாச்சியார். பிலம்பன் என்றால் யார்? எது? பண் அழிய பலதேவன் வென்றது யாரை? எதை? அது பாண்டிய நாட்டில் நடந்ததா? ஒன்றும் புரியவில்லையே. பாகவத புராணத்தைப் பார்த்தால் புரியும்.
ப்ரலம்பன் என்ற அசுரனை பலராமன் பாண்டிரமென்னும் ஆலமரத்தின் அருகில் வென்று கொன்றதாக பாகவத புராணம் சொல்கிறது. அந்த ஆலமரம் தமிழகத்தில் இல்லை; வடக்கே யமுனைக்கரையில் தான் இருக்கிறது. ஆலமரத்திற்கு வடவிருட்சம் என்ற பெயரும் உண்டு. ஆலிலைத் துயில்பவன் என்பதைத் தானே வடபத்ரசாயி என்று சொல்கிறோம்; வில்லிபுத்தூரில் இருக்கும் வடபெருங்கோவிலுடையான் திருக்கோவில் திருமாலின் திருப்பெயர் அது தானே. (நல்ல வேளை. அந்த வடபெருங்கோவிலும் ஆண்டாளின் வீட்டிற்கு வடக்கே இருந்ததால் தான் அந்தப் பெயர் என்று சொல்லாமல் விட்டோம்). வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் பாண்டிரம் என்னும் ஆலமரத்தின் அருகே என்னைக் கொண்டு விடுங்கள் என்பதைத் தான் ஆண்டாள் இங்கே 'பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின்' என்கிறாள். அதில் ஐயமே இல்லை.
2. சோலைமலைப்பெருமான் துவராபதி எம்பெருமான்:
இந்த இடத்தில் சோலைமலைப்பெருமான் தான் துவராபதி எம்பெருமான் என்று சொல்வது எந்த வகையில் 'வடமதுரை மைந்தன்' என்று குறித்தது தமிழக மதுரையைக் குறிக்கும் என்று புரியவில்லை. சோலைமலையிலும் மற்ற திருமால் கோவில்களிலும் இருப்பவன் துவராபதி இறைவன் தான்; ஆலின் இலைப் பெருமான் தான். அதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் அந்தத் தரவு வடமதுரை மைந்தன் என்று குறித்தது கூடல் அழகரையோ மதுரைக்கு வடக்கே இருக்கும் சோலைமலை அழகரையோ தான் என்று காட்டுவதாகத் தெரியவில்லை. வேங்கடவன் விண்ணோர் தலைவன் என்றெல்லாம் பட்டியல் இட்டுவருவதைப் போல் சோலைமலைப் பெருமான், துவராபதி எம்பெருமான், ஆலின் இலைப்பெருமான் என்று அவன் பெயர்களையும் புகழ்களையும் பட்டியல் இடுகிறாள் கோதை. அது போன்ற பட்டியலை நாலாயிரத்தில் நிறைய பார்க்கலாம். அதனால் வடமதுரை என்றது தென்னக மதுரையைத் தான் என்றோ யமுனைத்துறைவன் என்றது வைகைக்கரையைத் தான் என்றோ காட்டுவதாக இந்தத் தரவின் மூலம் அறிய முடியவில்லை.
ஆய்ப்பாடியை வில்லிபுத்தூருக்கு மாற்றி தன்னையும் தன் தோழியர்களையும் ஆய்ப்பெண்களாக மாற்றி வடபெரும்கோவிலுடையானின் (வடபத்ரசாயியின்) திருக்கோவிலை நந்தகோபன் திருமாளிகையாக மாற்றி ஆண்டாள் திருப்பாவை பாடினாள் என்று சொன்னால் அதற்கு திருப்பாவையும் பெரியவர்கள் பலர் செய்த உரைகளும் துணையாக நிற்கின்றன. ஆனால் ஆய்ப்பாடியை மதுரைக்கும் யமுனையை வைகைக்கும் ஆண்டாள் மாற்றுகிறாள் என்பதற்கு வலுவான தரவு இருப்பதாகத் தோன்றவில்லை.
***
இன்னும் ஆழமாகச் சென்று ஆராய நாலாயிரத்தில் இருந்து இன்னும் சில தரவுகளைப் பார்க்கலாம்.
3. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்:
நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் வரும் ஒரு பாசுரம் இது,
இதுவோ பொருத்தம் மின்னாழிப்படையாய்
ஏறும் இருஞ்சிறைப்புள்
அதுவே கொடியாய் உயர்த்தானே
என்றென்று ஏங்கி அழுதக்கால்
எதுவே ஆகக் கருதும் கொல்
இம்மாஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை உத்தர
மதுரைப் பிறந்த மாயனே
ஆண்டாள் சொன்னதையே தான் இவரும் சொல்கிறார். மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே. தேன் சிந்தும் சோலைகள் நிறைந்த வடமதுரையில் பிறந்த மாயனே. 'ஆகா! சோலை என்று எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்?! இவரும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். தாமிரபரணிக் கரையில் இருக்கும் திருக்குருகூராம் ஆழ்வார் திருநகரியில் பிறந்து வாழ்ந்தவர் தான். இவருக்கும் தமிழக மதுரை வடக்கில் இருப்பது தான். அதனால் தான் உத்தர மதுரை என்றார். அது மட்டும் இல்லாமல் கோதை 'மாயனை' என்று தொடங்கியது போல் இவரும் 'மாயனே' என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக திருமாலிருஞ்சோலை தான் உத்தர மதுரை என்பதைக் காட்ட மதுவார் சோலை என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வளவு தெளிவாக ஆழ்வாரின் திருவுள்ளம் தெரியும் போது நேர்மையாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. நேர்மையை உள்ளத்தே கொள்வோம்' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா. ஐயோ பாவம். 'பிறந்த' என்ற சொல்லை இட்டுக் கெடுத்தாரே. திருமாலிருஞ்சோலையில் மாயன் பிறந்ததாக எந்த புராணமும் சொல்லவில்லையே. தமிழக மதுரையில் பிறந்ததாகவும் சொல்லவில்லையே. அப்படியென்றால் ஆழ்வார் திருவுள்ளம் உண்மையில் வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுரையில் பிறந்தவன் தான் மாயன் என்பதைச் சொல்வதாகத் தானே தெரிகிறது. அந்த உத்தர மதுரையைத் தானே மதுவார் சோலை உடைய மதுரை என்கிறார். இந்தப் பாசுரமும் 'வடமதுரை மைந்தன்' என்றால் 'உத்தர மதுரையில் பிறந்தவன்' என்ற பொருளைத் தான் சொல்கிறது.
4. திருமங்கை மன்னன்:
திருமங்கையாழ்வாரின் பாசுரங்களில் சில இடங்களில் மதுரை என்று வருகிறது. அவற்றைப் பார்ப்போம்.
சீராரும் மாலிருஞ்சோலை திருமோகூர்
பாரோர் புகழும் வதரி வடமதுரை...
பெருமாள் திருக்கோவில்கள் இருக்கும் திருத்தலங்களைப் பட்டியல் இடும் போது திருமாலிருஞ்சோலை, திருமோகூர் என்று மதுரைக்குப் பக்கத்தில் இருக்கும் இரு தலங்களைச் சொல்லிவிட்டு உடனே பத்ரிகாச்ரமம் என்ற வதரியையும் வடமதுரையையும் கூறுகிறார். திருமங்கையாழ்வார் சோழநாட்டவர். அதனால் அவருக்கு தென்னக மதுரை தென்மதுரையாகத் தான் இருந்திருக்க வேண்டும்; அது மட்டும் இல்லாமல் மதுரையின் வடக்கே இருக்கும் திருமாலிருஞ்சோலையைத் தனியாகச் சொல்லிவிட்டார். அதனால் வடமதுரை என்று சொன்னது உண்மையிலேயே வடநாட்டில் இருக்கும் மதுரையைத் தான் என்று கொள்வதில் தடையில்லை.
மன்னு மதுரை வசுதேவர் வாழ்முதலை
நன்னறையூர் நின்ற நம்பியை வம்பவிழ்தார்
கன்னவிலும் தோளான் கலியன் ஒலி வல்லார்
பொன்னுலகில் வானவர்க்குப் புத்தேளிர் ஆகுவரே.
மன்னு வடமதுரை என்று நாச்சியார் சொன்னதைப் போல் இவர் மன்னு மதுரை என்கிறார். வட என்று சொல்லவில்லை; அதனால் தமிழக மதுரையைத் தான் சொன்னார் என்று கொள்வதில் தட்டில்லை. ஆனால் மன்னு மதுரை என்பது வசுதேவருக்கு அடைமொழியாக வந்ததால் இங்கே சொல்லப்படும் மதுரை வடநாட்டு மதுரை என்பது தெரிகிறது. தமிழக மதுரையில் வசுதேவர் வாழவில்லை; அவருக்குக் கோவிலும் இல்லை.
வில்லார் விழவில் வடமதுரை
விரும்பி விரும்பா மல்லடர்த்து
கல்லார் திரள் தோள் கஞ்சனைக்
காய்ந்தான் பாய்ந்தான் காளியன் மேல்
சொல்லார் சுருதி முறையோதிச்
சோமுச் செய்யும் தொழிலினோர்
நல்லார் மறையோர் பலர் வாழும்
நறையூர் நின்ற நம்பியே
இங்கும் வடமதுரை என்றது வடநாட்டு மதுரையைத் தான் என்பது வில் விழாவையும், மல்லரைக் கொன்றதையும், கம்சனைக் காய்ந்ததையும், காளியன் மேல் பாய்ந்ததையும் சொன்னதால் தெளிவு.
***
5. விப்ரநாராயணர்:
தொண்டரடிப்பொடி ஆழ்வார் மதுரையைப் பற்றி ஓரிடத்தில் குறித்துள்ளார்.
வளவெழும் தவள மாட
மதுரை மாநகரம் தன்னுள்
கவள மால் யானை கொன்ற
கண்ணனை அரங்கமாலை...
அடடா. மதுரை மாநகரம் என்று சொல்லியிருக்கிறாரே. அது நம் தமிழக மதுரையாய் இருக்கலாமே. தவள மாடங்கள் நிறைந்த மதுரை என்று இம்மாநகரை இன்னும் பல இலக்கியங்கள் புகழ்கின்றதே - என்றால், 'மாநகரம் தன்னுள் கவள மால் யானை கொன்ற' என்று சொன்னதால் இங்கும் சொல்லப்பட்டது வடநாட்டு மதுரையைத் தான் என்பது தெளிவு.
***
6. வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்:
சரி. மற்றவர் சொன்னதைப் பார்த்தோம். ஆண்டாளின் திருத்தந்தை சொன்னவற்றைப் பார்க்கலாமா?
'திருமதுரையுள் சிலை குனித்து' என்று திருப்பல்லாண்டில் பாடுகிறார் விட்டுசித்தர். வில்லை முறித்து என்று சொன்னதால் இங்கு சொல்லப்படும் திருமதுரை வடநாட்டு மதுரை தான் என்பது தெளிவு.
வானில் அரசு வைகுந்தக் குட்டன்
வாசுதேவன் மதுரைமன்னன் நந்த
கோன் இளவரசு கோவலர் குட்டன்
கோவிந்தன்....
இங்கே மதுரை மன்னன் என்றதால் எந்த மதுரையைச் சொன்னார் என்று தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வாசுதேவன் (வசுதேவன் மகன்) என்றதாலும் நந்தகோன் இளவரசு என்றதாலும் கோவலர் குட்டன் என்றதாலும் இங்கே மன்னனாய் சொன்னது வடமதுரைக்கு மன்னன் என்று தான் என்பது தெளிவு.
இங்கே பெரியாழ்வார் 'மதுரை மன்னன்' என்றது போல் அவர்தம் திருமகளாரும் 'மதுரையார் மன்னன்' என்றும் 'வடமதுரையார் மன்னன்' என்றும் பாடுகிறாள். அங்கும் இதே பொருள் தான் என்பதில் ஐயமில்லை.
'என் மகளை எங்கும் காணேன் மல்லரை அட்டவன் பின் போய் மதுரைப் புறம் புக்காள் கொலோ' என்று இன்னொரு இடத்தில் பாடுகிறார் பெரியாழ்வார். கோதை 'உய்த்திடுமின்' என்று பாடிய பிறகு பாடியது போலும் இந்தப் பாசுரம். அதனால் தான் 'மல்லரை அட்டவன் பின் போய்' மதுரைப் புறம் புக்காள் கொலோ என்று கேட்கிறார். இங்கும் மல்லரை அட்ட நிகழ்ச்சி நடந்த வடநாட்டு மதுரை தான் சொல்லப்பட்டது என்பது தெளிவு.
இன்னொரு இடத்தில் பெருமாள் திருத்தலங்களைப் பட்டியல் இடுகிறார் பெரியாழ்வார். 'வடதிசை மதுரை, சாளக்கிராமம், வைகுந்தம், துவரை, அயோத்தி, இடமுடை வதரி, இட வகையுடைய எம் புருடோத்தமன் இருக்கை' என்கிறார். இங்கு பெரும்பாலும் வடநாட்டில் இருக்கும் தலங்களைக் குறித்ததால் இந்தப் பட்டியலில் வரும் 'வடதிசை மதுரை' தென்னக மதுரை இல்லை வடநாட்டு மதுரையே என்பது தெளிவு.
***
இப்படி நாலாயிரத்தில் 'மதுரை' என்ற சொல் வரும் இடங்களை எல்லாம் பார்க்கும் போது அங்கெல்லாம் குறிக்கப்பட்டது வடநாட்டு மதுரையே என்பது தெளிவாகத் தெரிவதால் ஆண்டாளும் 'வடமதுரை மைந்தனை' என்ற போது வடநாட்டு மதுரையைத் தான் குறித்தாள் என்பது தெளிவு. வில்லிபுத்தூருக்கு வடக்கே இருக்கும் தென்னக மதுரையை வடமதுரை என்றாள் என்பது சுவையாக இருக்கிறது; ஆனால் வலிந்து கொண்ட பொருளாகத் தான் தோன்றுகிறது.
கண்ணனும் தமிழ்க்கடவுள் என்று காட்ட போதிய அளவிற்குத் தரவுகள் இருக்கின்றன. இந்த 'வலிந்து கொள்ளப்பட்ட தரவுகள்' தேவையில்லை. எப்படி திருமுருகன் வடக்கே பிறந்து வடக்கே வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானே எப்படி சிவபெருமான் வடகயிலையில் வாழ்ந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறானோ அதே போல் கண்ணனும் வடமதுரையில் பிறந்து வடமதுரையார் மன்னனாக இருந்தாலும் தமிழ்க்கடவுளாக இருக்கிறான். அதுவும் மிகத் தெளிவு.
Friday, September 5, 2008
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment